சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்
பண் - குறிஞ்சி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oCWjnKbTyZw
2.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)
பண் - செவ்வழி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Y6doJGVjkEM
4.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   மனைவி தாய் தந்தை மக்கள்
பண் - திருநேரிசை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-RAZYkaFjcM
4.103   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
பண் - திருவிருத்தம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MMUx_48xcZA
5.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பண் - திருக்குறுந்தொகை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bTyC-7PmnsI
6.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
பண் - திருத்தாண்டகம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mbK6F7eIxSY
7.046   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE
7.101   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆம் இதழி விரை
பண் -   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.084   புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய
நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி,
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு,
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.

[1]
பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி
அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்-
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக்
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[2]
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்;
தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[3]
மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல்
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த,
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே.

[4]
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி,
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்-
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே.

[5]
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,
வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல்
ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த,
கானல் கடல் நாகைக்காரோணத்தானே.

[6]
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[7]
வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள்
இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்-
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே.

[8]
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த,
பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச்
செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த
கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.

[9]
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,
அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்;
பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த,
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[10]
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன்
உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.116   கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  
பண் - செவ்வழி   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா,
வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை,
வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[1]
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான்,
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது
மலங்கி ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[2]
வெறி கொள் ஆரும் கடல் கைதை, நெய்தல், விரி
பூம்பொழில்
முறி கொள் ஞாழல், முடப்புன்னை, முல்லை(ம்)முகை,
வெண்மலர்,
நறை கொள் கொன்றை(ந்), நயந்து ஓங்கு நாதற்கு இடம்
ஆவது
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[3]
வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்) மதியோடு
உடன்
கொண்ட கோலம், குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியு
உண்டுபோலும் என வைத்து உகந்த(வ்) ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[4]
வார் கொள் கோலம் முலை மங்கை நல்லார் மகிழ்ந்து
ஏத்தவே,
நீர் கொள் கோலச் சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு
எய்தவே,
போர் கொள் சூலப்படை புல்கு கையார்க்கு இடம் ஆவது
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[5]
விடை அது ஏறி(வ்) விட அரவு அசைத்த விகிர்தர் அவர்,
படை கொள் பூதம்பல ஆடும் பரம் ஆயவர்,
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம்
ஆவது
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[6]
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர்ப் பூசனை
செய்து வாழ்வார், சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்,
எய்த வாழ்வார்; எழில் நக்கர்; எம்மாற்கு இடம் ஆவது
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[7]
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடிபத்து இற,
அத்து இரட்டி, விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது
மைத் திரட்டி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[8]
நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,
அல்லர், ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[9]
உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை விட்டு
உழல்வார்களும்,
பெயர்த்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும்,
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[10]
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.071   மனைவி தாய் தந்தை மக்கள்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!

[1]
வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!

[2]
நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை, வேதவித்தை, விளை பொருள் மூலம் ஆன
கருத்தனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை, உணர்தலால் நாம் உய்ந்தவா!-நெஞ்சினீரே!

[3]
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட
கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!

[4]
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி,
மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,
கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.

[5]
வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும்
உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய
செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே!

[6]
வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை,
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை,
கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்த ஆறே!

[7]
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெஞ்சிலையர்; வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்-
பெற்றவர் பிறந்தார்; மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே!

[8]
கரு மலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து
ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்;
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்க, திண்ணம், நாம் உய்ந்தஆறே!

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.103   வடிவு உடை மாமலைமங்கை பங்கா!  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!

[1]
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!

[2]
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!

[3]
பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்;
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!

[4]
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார்
வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக்
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.

[5]
பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே!
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!-
மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?

[6]
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!

[7]
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே!
எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்:
கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை-
நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!

[8]
கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திருமலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்
பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.083   பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்;
காணத் தான் இனியான் கடல் நாகைக்கா-
ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.

[1]
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை,
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை,
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை,
கண்டலும், வினை ஆன கழலுமே.

[2]
புனையும் மா மலர் கொண்டு, புரிசடை
நனையும் மா மலர் சூடிய நம்பனை,
கனையும் வார்கடல் நாகைக்காரோணனை,
நினையவே, வினை ஆயின நீங்குமே.

[3]
கொல்லை மால்விடை ஏறிய கோவினை,
எல்லி மாநடம் ஆடும் இறைவனை,
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை,
சொல்லவே, வினை ஆனவை சோருமே.

[4]
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக்
கையனை, கடல் நாகைக்காரோணனை,
மை அனுக்கிய கண்டனை, வானவர்
ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

[5]
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை,
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை,
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை,
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[6]
சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை,
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை,
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை,
மனம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[7]
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,
எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனை,
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை,
சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.

[8]
கருவனை, கடல் நாகைக்காரோணனை,
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை,
ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த
செருவனை, தொழத் தீவினை தீருமே.

[9]
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய, பாதம் அணைதர,
தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.022   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை, பைஞ்ஞீலியானை,
சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும் திருமுடிமேல்-திங்கள் சூடிப்
பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர் தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,-
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[1]
விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை,
பெண்ணானை, ஆணானை, பேடியானை, பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை,
அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை,
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[2]
சிறை ஆர் வரிவண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோக(ன்)னை,
மறை ஆன்ற வாய் மூரும் கீழ் வேளூரும் வலி வலமும் தேவூரும் மன்னி அங்கே
உறைவானை, உத்தமனை, ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன் தன்னை,-
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[3]
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை, ஆச்சிராம(ந்) நகரும் ஆனைக்காவும்,
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூ உலகும் தான் ஆய மூர்த்தி தன்னை,
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினானை,-
கன்னி அம்புன்னை சூழ் அம் தண்
நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[4]
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான் தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய,
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை; பன்மையே பேசும் படிறன் தன்னை;
மடை இடையே வாளை உகளும் பொய்கை மருகல் வாய்ச் சோதி மணி கண்ட(ன்)னை;-
கடை உடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[5]
புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை; பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய,
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை;
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம்   இட்டு இயங்கும் ஈசன் தன்னை;-
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[6]
பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை, புண்ணியனை, வெண் நீறு பூசினானை,
சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென் சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை,
மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,-
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண்
நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[7]
வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தினானை, விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை,
புண் தலைய மால்யானை உரி போர்த்தானை, புண்ணியனை, வெண் நீறு அணிந்தான் தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான் தன்னை, ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,-
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[8]
சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை; தொல்-நரகம் நன்நெறியால்-தூர்ப்பான் தன்னை;
வில்லானை; மீயச்சூர் மேவினானை, வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி,
பொல்லாதார் தம் அரணம் மூன்றும் பொன்ற, பொறி அரவம் மார்பு ஆரப் பூண்டான் தன்னை;
கல்லாலின் கீழானை;- கழி சூழ் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[9]
மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும், மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்,
சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய்   என்று கருதாதே, போத, -நெஞ்சே!-
பனைஉரியைத் தன் உடலில் போர்த்த எந்தை-அவன் பற்றே பற்று ஆகக் காணின் அல்லால்,
கனைகடலின் தெண்கழி சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே?.

[10]
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர்   உருவம் காணாமே சென்று நின்ற
படியானை, பாம்புரமே காதலானை, பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னை,
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,-
கடி நாறு பூஞ்சோலை அம் தண்
நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.046   பத்து ஊர் புக்கு, இரந்து,  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து ‌ சுக போகங்களும் கிடைக்க
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;
முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[1]
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, | விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி  புக்கு அங்கு இருந்தீர்;
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் | பகட்ட நான் ஒட்டுவனோ? பல    காலும் உழன்றேன்;
சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் |திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர்   நீரே;
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

[2]
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு,  எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி   வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை   பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி      இருந்தீரே! .

[3]
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை   உகந்தீர்;
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே?
வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம்    எலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[4]
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து,| வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்;
தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் | சுந்தரனே! கந்தம் முதல் ஆடை  ஆபரணம்
பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்;| பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக்
கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!

[5]
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் | இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம்| பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட | உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[6]
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்| தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து,| திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த,| நிறை மறையோர் உறை வீழிமிழலை  தனில் நித்தல்
காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

[7]
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்;| வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு;
ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்;| அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம்   அதனில்-
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்;| தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல்   ஒட்டேன்;
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .

[8]
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி;| மலை அரையன் பொன் பாவை,   சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்;| எம்பெருமான்! இது தகவோ?      இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்,| திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்;   நாளை,
கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா | கடல் நாகைக்காரோணம்     மேவி இருந்தீரே! .

[9]
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;| மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்!| கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை   உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர்| பொன் பூவும் பட்டிகையும் புரிந்து     அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[10]
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் | பற்று ஆய பெருமானே! மற்று ஆரை   உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்;| ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண்     பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் |கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!   என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன | அருந்தமிழ்கள் இவை வல்லார்    அமருலகு ஆள்பவரே .

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.101   பொன் ஆம் இதழி விரை  
பண் -   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரிசடைமேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே!-
துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துணைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[1]
வரைக்கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டு ஆனால் மனைதோறும்
இரக்கை ஒழியீர்; பழி அறியில், ஏற்றை விற்று நெல் கொள்வீர்!-
முரைக் கை பவளக்கால் காட்ட, மூரிச் சங்கத்தொடு முத்தம்
திரைக் கை காட்டும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[2]
புல்லும் பெறுமே, விடை? புணரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர்!
இல்லம் தோறும் பலி என்றால், இரக்க இடுவார் இடுவாரே?-
முல்லை முறுவல் கொடி எடுப்ப, கொன்றை முகம் மோதிரம் காட்ட,
செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[3]
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி,
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை, புரம் மூன்று எரித்தீர், பொருள் ஆக-
தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க,
சேண் தார் புரிசைத் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[4]
ஒருவர்க்கு ஒருவர் அரிது ஆகில், உடை வெண்தலை கொண்டு ஊர் ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே? சொல்லீர்-எத்தனையும்
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[5]
தோ(ட்)டை உடுத்த காது உடையீர்! தோலை உடுத்துச் சோம்பாதே
ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே! அரிது அன்று(வ்)-
ஓடை உடுத்த குமுதமே உள் அம் கை மறிப்ப, புறம் கை அனம்
சேடை உடுத்தும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[6]
கடு நஞ்சு உண்டு, இரக்கவே, கண்டம் கறுத்தது; இக் காலம்-
விடும் நஞ்சு உண்டு-நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா, நீ!-
கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகைக்குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[7]
பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி, பெண் ஓர்பாகமா,
வெள்ளை நீறே பூசுவீர்; மேயும் விடையும் பாயுமே?-
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்
தெள்ளும் வேலைத் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[8]
மத்தம் கவரும் மலர்க்கொன்றைமாலை மேல் மால் ஆனாளை
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே, பழி? உரையீர்-
முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடிமன்னர்
சித்தம் கவரும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[9]
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர்; களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர்; ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்?-
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக்கோபுரத்து நெருக்க, மலர்ச்
சிறைவண்டு அறையும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

[10]
தேர் ஆர் வீதித் தென்நாகைத் திருக்காரோணத்து இறையானைச்
சீர் ஆர் மாடத் திரு நாவலூர்க் கோன்சிறந்த வன்தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள்,
வார் ஆர் முலையால் உமை கணவன் மதிக்க இருப்பார், வான் அகத்தே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list